Sunday, May 13, 2012

மே18 - 3 ம் ஆண்டு நினைவு நாள்

வாழ்வில் ஒருமுறை அம்மானிதரின் பக்கத்தில் நின்று ஒரு நிழற்படம் எடுத்துக் கொள்ள  வேண்டும் என்பது எனது தனியாத ஆவல். சட்டைப்பையில் எனது இதயத்துக்கு பக்கத்தில் எப்பொழுதும் இருந்தவர், நெஞ்சினில் எப்பொழுதும் குடி இருப்பவர். உன்னை எப்படியும் கூட்டிக் கொண்டு போய் நிழற்படம் எடுத்துக் கொடுக்கிறேன் என எனக்கு ஆசைகளை இன்னும் ஊட்டினார் ஒரு ஜெர்மனி வாழ் ஈழத்து சகோதரர். நம்பிக்கைகள் தளர்ந்து கொண்டிருக்கிறது.

நிழல் அரசாங்கத்தை நடத்தினாலும், தமிழீழம் என்ற  ஒரு நாட்டை தமிழர்களுக்கு வாங்கிக் கொடுப்பார் என நினைத்திருந்தர்வர்களுக்கு எல்லாம் அதிர்ச்சி அளித்த நாள்.

ஒற்றுமை இல்லாத தமிழக அரசியல்வாதிகளும், ஈழம் அரசியல் நாடகத்திற்கான ஒரு அங்கமாக பயன்படுத்தியவர்கள், ஈழப்பிணத்தில் ஓட்டுப் பொறுக்கியவர்கள் என்றவர்களுக்கு சளைக்காமல் உணர்வற்ற தமிழர்களும் இந்த மே18 நடைபெற ஒரு அங்கம்.

கலைஞர் அபிமானியாக ஒரு உடன்பிறப்பாக, ஈழத்தைச் சொல்லித் தந்த கலைஞர் ஆட்சிக்காகவா அல்லது ஸ்பெக்ட்ரம் வழக்கிற்காகவா என அறிய முடியாமல் டெல்லியின் தூதுவனான பிரணாப்பின் வருகைக்குப் பின் அடங்கியதும் கண்டு வெட்கப்பட்டு முடங்கி இருக்க வேண்டி இருக்கிறது. ஈழத்திற்காக இழந்த உணர்வான திமுகவினர், மே18க்குப் பின் ஒரு குற்ற உணர்வுடன் நடமாட வேண்டி இருக்கிறது.

என்றைக்கும் அய்யர் ஆட்சியாகிப் போன அதிமுகவிடம் ஈழத்துக்கு தீர்வு கிடைக்காது என்பதும், உணர்வான திமுக 3 ஆண்டுக்குப் பின் டெசோவில் தனி ஈழம் அமைக்க தீர்மானம் இயற்றுவதும் இன்றைக்கு எப்படி உதவப்போகிறதோ.?

ஈழத்து அரசியல்வாதிகள், துரோகிகளாய் மாறிப் போன முன்னாள் தளபதிகள் என தமிழக அரசியல்வாதிகளுக்கு சற்றே குறைவில்லாமல் ஈழத்தில். இப்படிப்பட்ட சூழலில் தமிழர்களுக்கு ஒரு நாடு என நம்புவது குதிரைக்கு கொம்பு முளைப்பதற்கு சமம். தண்ணீருக்கே ஒன்று சேராத தமிழர்கள், இனப்படுகொலைக்கா ஒன்று சேருவார்கள். ? இப்படிப்பட்டவர்களுக்காகவா 30வருட போராட்டத்தை நடத்தினார்?

அய்நாவும், சர்வதேசமும், நாடுகடந்த தமிழீழ அரசும், உணர்வான தமிழர்களும் ஒன்று பட்டு, தமிழீழக் கனவு தேசத்தை அமைப்பது, உணர்வில்லா தமிழர்களால் தமிழீழ தேசம் இழந்த மாமனிதர்களுக்கு, மாவீரர்களுக்குச் செய்யும் உதவி.

தமிழீழக்கனவிற்காக அரசியலைத் தாண்டி என்றைக்கு தமிழர்கள் ஒன்றுபடுகிறார்களோ அன்றைக்கு நிச்சயம் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு அண்ணாவின் இறுதி ஊர்வலத்தை விட தமிழர்கள் ஒன்று சேர்வார்கள்.

தமிழீழ தேசத்திற்காக உயிர் துறந்த மாவீரர்களுக்கு எனது அஞ்சலி.