வருவது தமிழ்ப் புத்தாண்டா?
பகீரதன் தெரியும் அல்லவா? பெரிய தவம் செய்தானே. அந்தத் தவச் சிற்பம்கூட மாமல்லபுரத்தில் உள்ளதே. அவன் தான் பெண் ணுக்கும், பெண்ணுக்கும் பிறந்தவன். இவன் செய்த தவம்தான் அந்தரத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆகாச கங்கையைத் தரைக்கு வர வைத்தது. அதன் காரணமாகத்தான் கங்கை நதி வட நாட்டில் ஓடுகிறது. பிறப்பு மாதிரியே அவனது சாதனைகளும் கூட அறிவிற்கு அப்பாற்பட்ட கதைதான்.அயோத்தியில் ஓர் அரசன். இராமனுக்கு முந்தியா, பிந்தியா தெரியவில்லை. அவனுக்கு இரண்டு தங்கைகள். இருவரும் ஒரே கட்டிலில் தான் உறங்குவார்கள். ஒன்றாகவே படுத்துத் தூங்கு வார்கள். ஒருவரோடொருவர் அணைத்தவாறு நித்திரை கொள்ளும் போது ஒருத்திக்குக் கர்ப்பம் உண்டாகிப் பிள்ளையும் பிறந்துவிட்டது. அந்தப் பிள்ளைதான் பகீரதன். இதை மருத்துவ உலகு ளுயயீயீhளைஅ என்கிறது. ஆனால், இதனால் கருத்தரிக்கும் என மருத்துவ அறிவியல் கூறவில்லை. அர்த்தமுள்ள இந்துமதம் கூறுகிறது.
இதிலும் சுக்கில சுரோணிதம் கிடையாது. சுரோணிதம் மட்டுமே உண்டு.
படைப்புக் கடவுள் பிரம்மா. அதற்கு அப்பா நாராயணன். இதன் தொப்புளில் இருந்து புறப்பட்டு நிற்கும் தாமரைப் பூவில் உட்கார்ந் திருக்கும். இந்த நிலையில், இதன் மகன் நாரதனாம். கலகம் செய்யும் கதாபாத்திரமாக இந்து மதக் கதைகளில் வரும். ஆக, நாராயணனின் மகன் பிரம்மாவின் மகன் நாரதன். நாராயணனுக்குப் பேரன். நாராயணனின் கீழிறக்கம் (அவதாரம்) கிருஷ்ணன். பெண் லோலன். எல்லாப் பெண்களும் கிருஷ்ணனையே சுற்றிச் சுற்றிச் சுகம் காண்கிறார்கள். அப்படி ஒரு கவர்ச்சி எப்படி வந்தது கிருஷ்ணனுக்கு என்று சந்தேகம் நாரதனுக்கு. கிருஷ்ணனிடம் கேட்கிறான் - எனக்கும் ஒரு பெண் வேண்டும் என்று. கிருஷ்ணன் சொன்னானாம், எங்கே நான் இல்லையோ, அங்கே நீ போய்க் கொள் என்று. நம்பிய நாரதன் நாயாய் அலைந்ததாம். பேயாய்த் தேடியதாம். எங்கும் தனியாகப் பெண் இல்லவே இல்லையாம். எல்லா இடத்திலும் கிருஷ்ணன் சல்லாபித்துக் கொண்டே இருந்தானாம். அலுத்துப் போய் நாரதன் கிருஷ்ணனிடம் வந்து அப்படி என்னதான் இருக்கிறது, உன்னிடம் என்று கேட்டதாம். நாரதனுடன் கலவி செய்து, காட்டியதாம் கிருஷ்ணன். கலவியின் விளைவாக ஒன்றல்ல, இரண்டல்ல, அறுபது பிள்ளைகள் பிறந்தனவாம். அவை தாம் பிரபவ முதல் அட்சய வருடம் வரை பெயர் கொண்ட வருடங்களாம். ஆமாம், தமிழ்ப் புத்தாண்டுகளின் பெயர்களாம்! ஒன்று கூடத் தமிழ்ச் சொல் இல்லை! எப்படி இவை தமிழ்ப் புத்தாண்டு?
பிறக்கப் போவது - சர்வஜித்! போன சர்வஜித்தில் பிறந்தவருக்கு இப்போது 60 வயது. மணிவிழா ஆண்டு. ஆளைப் பார்த்தால் வயது புரிந்துகொள்ளலாம். பார்க்காமலே சர்வஜித் ஆண்டில் பிறந்தேன் என ஒருவர் கூறினால், அவரின் வயதை எப்படிக் கணக்கிடுவது? ஒரு வயதுக் குழந்தை என்பதா? 60 வயது மணி விழாக்காரர் என்பதா? இவ்வளவு குழப்பமாகவா அறிவிற் சிறந்த தமிழ்ச் சமூகம் ஆண்டுக் கணக்கை வைத்துக் கொண்டிருக்கும்? இந்து தான் வைத்துக் கொண்டிருப்பர். நாம் இந்துக்கள் அல்லவே! பின் எப்படி இது நம் புத்தாண்டு? தமிழ்ப் புத்தாண்டு?