தமிழ்ப் புத்தாண்டு
1921-ஆம் ஆண்டு தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் தமிழகப் புலவர்கள் கூடிப் பேசினர். தமிழர்களின் ஆண்டுக் கணக்கு எது என ஆய்ந்தனர். பிரபவ முதல் அட்சயவரை நம்மீது திணிக்கப்பட்ட தமிழ் ஆண்டுக்கணக்கை - அறுபது ஆண்டுகள் மட்டுமே உள்ள ஒரு கணக்கை தமிழ்ப் புலவர்கள் ஏற்க மறுத்துப் புறந்தள்ளினர்.
ஒருமனதாக முடிவு செய்தனர் - திருவள்ளுவர் ஆண்டுக்கணக்கை வைத்துக் கொள்ள முடிவு செய்து அறிவித்தனர். ஆண்டுத் தொடர் எண் எப்படிக் குறிப்பது எனவும் விவாதித்து முடிவு செய்தனர். அதன்படி உலகம் முழுவதும் நடப்பிலுள்ள பொது ஆண்டு முறை எண்ணோடு 31 ஆண்டுகளைக் கூட்டிக் கணக்கிடுவது என முடிவு செய்து அறிவித்தனர். அதன்படி பொது ஆண்டு 2007-க்குத் திருவள்ளுவர் ஆண்டு 2038 ஆகிறது. அம்மாதிரியே தமிழ்நாடு அரசின் கணக்குமுறை கையாளப்பட்டு வருவதை அரசு நாள்காட்டியில் காணலாம்.
தமிழ்ப் புலவர் குழு ஆண்டுக்கணக்கை அறிவித்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், ஆண்டுப் பிறப்பு நாளையும் அறிவித்தது. அதன்படி திணிக்கப்பட்ட புத்தாண்டு நாளான சித்திரை முதல் நாள் (பெரும்பாலும் பொது ஆண்டுக் கணக்கின்படி ஏப்ரல் 14-ஆம் நாள்) என்பதனை ஏற்காது, தை முதல் நாளை (பெரும்பாலும் பொது ஆண்டுக் கணக்கின்படி ஜனவரி 14-ஆம் நாள்) புத்தாண்டுத் தொடக்க நாளாக ஏற்றிட வேண்டும் எனவும் அறிவித்தது.
இந்த வகை இரு அறிவிப்புகளில் முதல் அறிவிப்பை - திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை - தமிழ்நாடு அரசு ஏற்று, ஆணையிட்டுக் கைக்கொண்டு வருகிறது. ஆனால் இரண்டாம் அறிவிப்பை - புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்பதை இன்னும் ஏற்கவில்லை. ஏற்று அதற்கான ஆணைகளை முத்தமிழறிஞர் - தமிழவேள் மானமிகு, மாண்புமிகு கலைஞர் அவர்கள் பிறப்பிப்பார் என்கிற நம்பிக்கை எட்டுக் கோடித் தமிழர்களின் நெஞ்சத்திலும் உறுதியாக உள்ளது.
புரட்சிக் கவிஞர் பாடினார் - பத்தன்று, நூறன்று, பன்னூறன்று பல்லாயிரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில் புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்... என்று! அப்படிப் பல்லாயிரத்தாண்டுக் காலமாகப் புத்தாண்டாக இருந்த தை முதல் நாளை அதிகாரப்பூர்வமான அறிவிக்கப் பெறும் நன்னாளை எதிர்நோக்குவோம். பன்னாட்டுப் படையெடுப்பால் திணிக்கப்பட்ட ஆபாசப் புராணப் புளுகுகளைப் புறந்தள்ளுவோம்!
0 Comments:
Post a Comment
<< Home