Sunday, June 24, 2007

ஆர்.எஸ்.எஸ் ஒரு அபாயம் (பகுதி 1) - ராசேந்திரன்

>>>>>>>சாதித்துவ நெருப்பில் நந்தனை எரித்த வரலாற்றுத் தொடர்ச்சியாய் ஒரிசாவில் 'இந்துத்துவ' நெருப்புக்கு இரையாக்கப்பட்ட ஆஸ்திரேலியப் பாதிரியார் "கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ்" மற்றும் அவரது அன்பு மகன்கள் "பிலிப்ஸ் (வயது 9)" "திமோத்தி (வயது 7) நினைவிற்கு....<<<<<<<

ஒரு முன்னோட்டம்!

1982-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி! தமிழ்நாட்டில் - அன்றைய தினம், ஒரு கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி - இந்தியா முழுவதையுமே குலுக்க ஆரம்பித்தது! திருநெல்வேலி மாவட்டத்திலே மீனாட்சிபுரம் என்ற கிராமத்தைச் சார்ந்த சுமார் 1000 தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், தங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த சாதிக் கொடுமைகளால், இந்து மதத்துக்கே முழுக்குப் போட்டுவிட்டு அந்த தேதியில்தான் இஸ்லாம் மதத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்!

மத்தியில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் - தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பைத் துவக்கிடும் முயற்சிகளில் நாடு முழுவதும் தீவிரம் காட்டி செயல்பட்டனர். என்றாலும், அவர்கள் தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை!

அதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்துக் கொண்டிருந்த அவர்களுக்கு - இந்த மதமாற்றம் ஒரு வாய்ப்பாகப் பயன்பட்டது. டில்லியிலிருந்து - பல ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் இந்தக் கிராமத்திலே முகாமடிக்க ஆரம்பித்தனர்! மத மாற்றம் ஒரு 'தேசிய அதிர்ச்சியாக' பிரபலப்படுத்தப் பட்டது.

ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல; அது ஒரு தத்துவம்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் - அவசர நிலை காலத்தில் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டிருந்தது.ஆனால் - அதே அவசர நிலை காலத்தில் தமிழ் நாட்டில் பார்ப்பன ஆலோசகர் ஆட்சி நடந்தபோது ஆர்.எஸ்.எஸ் தத்துவம்தான் இங்கே ஆட்சி புரிந்தது! பார்ப்பன சங்கராச்சாரி ஆட்சிதான் தமிழ் நாட்டிலேயே கோலோச்சியது.

இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் இந்தியாவின் சமூக அமைப்பே ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வலியுறுத்தும் வர்ணாஸ்ரம தர்மத்தை சாதிய வடிவத்தில் அடிப்படையாகக் கொண்டதாகத்தான் இருக்கிறது. இதை முழுமைப்படுத்திட வேண்டும். இந்து நாடே ஒரு முழுமையான இந்து ராஷ்டிரமாக்கப்பட வேண்டும் என்ற முனைப்போடுதான் ஆர்.எஸ்.எஸ். தனது செயல் திட்டங்களை முடுக்கி விடுகிறது.

கெஞ்சினால் மிஞ்சுவதும் , மிஞ்சினால் கெஞ்சுவதுமான இந்த தந்திரக்காரர்கள்; தங்கள் அமைப்புக்கு பெரும் தலைவர்களின் ஆதரவெல்லாம் இருப்பதாக அப்பட்டமான பொய்ப் பிரச்சாரத்தில் இறங்கி- அதன் மூலம் அப்பாவிகளை மயக்கப் பார்ப்பது இவர்களின் நடைமுறை தந்திரம்!இந்தக் கூட்டத்தின் வரலாற்றுக் கலாச்சாரமே இப்படித்தான் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டமுடியும்.

இதோ ஒரு உதாரணத்தை சுட்டிக் காட்டுகிறோம். மத்தியில் ஆட்சிக் கட்டிலுக்கு வந்த ஜனதா கட்சி உடைந்து சிதறியதற்கு காரணமாயிருந்தது இரட்டை உறுப்பினர் (Duel Membership) பிரச்சனை! அதாவது ஜனதா கட்சியிலே அங்கம் வகிப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஆகலாமா? என்ற பிரச்சனை. இது அப்போது மட்டும் ஏற்பட்டதல்ல. 1934-ம் ஆண்டிலேயே அந்தப் பிரச்சனை காங்கிரஸ் கட்சியிலேயே ஏற்பட்டிருக்கிறது!

1934-ம் ஆண்டிலேயே அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஒரு தீர்மாணத்தையே நிறைவேற்றியது; என்ன அந்தத் தீர்மானம்?காங்கிரஸ் கட்சியிலே உறுப்பினராக இருக்கக் கூடியவர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினராக இருக்கக் கூடாது.இந்தத் தீர்மானம் ஆர்.எஸ்.எஸ். காரர்களின் காங்கிரஸ் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தியது! உடனே காந்தியாருக்கு வலைவீசும் தந்திரங்களை ஆர்.எஸ்.எஸ். காரர்கள் மேற் கொண்டார்கள். அதே ஆண்டு 'வார்தா'விலே ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடந்து கொண்டிருந்தது! அதைப் பார்வையிட வரவேண்டும் என்று காந்தியாரை அழைத்தார்கள். ஹெட்கேவர் - என்ற நாக்பூர் பார்ப்பனர், காந்தியாரை நேரில் போய் சந்தித்துப் பேசினார்! காந்தியாரும் முகாமைப் பார்வையிட்டார்!உடனே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்கள் பிரச்சார சாதனங்கள் மூலம் திட்டமிட்ட ஒரு கருத்தைப் பரப்பினர். "ஆர்.எஸ்.எஸ். சேவைகளை காந்தி அடிகள் நேரில் பார்த்து பாராட்டினார்."
என்பதே அந்தப் பிரச்சாரம்!

ஆனால் - இது உண்மைக் கலப்பில்லாத பொய்ப் பிரச்சாரம்! காந்தியார் - பாராட்டு எதுவுமே தெரிவிக்கவில்லை; அப்படி தெரிவித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அது மட்டுமல்ல; காங்கிரஸ்காரர்கள் - ஆர்.எஸ்.எஸ். சில் சேரத் தடைவிதித்து காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணமும் அப்படியே இருக்கட்டும் என்றார் காந்தியார். காந்தியாரோடு 'வார்தா' பயிற்சி முகாமுக்கு உடன் சென்ற சீடர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் நல்ல சேவைகளை செய்கிறார்கள் என்று காந்தியாரிடம் சொன்னபோது - காந்தியார் அளித்த பதில் என்ன தெரியுமோ?

"ஹிட்லரின் நாசிப்படையும் முசோலினியின் பாசிசப் படையும் இதே போல்தான் சேவை செய்தது என்பதை மறந்துவிட வேண்டாம்." இப்படி ஹிட்லர், முசோலினியின் நாசிச, பாசிசப் படைகளோடு , ஆர்.எஸ்.எஸ்ஸை ஒப்பிட்டுக் கருத்துக் கூறிய காந்தியாரை தங்களின் ஆதரவாளர் போல் சித்தரித்துக் காட்டிய பொய்யர்களின் கூடாரம்தான் ஆர்.எஸ்.எஸ்.!

"Mahatma Gandhi, the last Phase" என்ற காந்தியாரின் சுயசரிதையை அவரது உதவியாளர் பியாரிலால் (Pyarilal) எழுதியிருக்கிறார். அந்த நூலின் 440வது பக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பற்றி காந்தியார் சொன்ன மேற்கண்ட கருத்துக்கள் எடுத்துக் காட்டப் பட்டிருக்கிறது.

தொடரும்...

டாக்டர்.கோவூரின் சவால்கள்

கடவுள் சக்திக்கு வக்காலத்து வாங்கும் சங்கராச்சாரி முதல் சாய்பாபா வரை மதவாதிகள் எவரும் சந்திக்க முடியாத கோவூரின் சவால்கள் வருமாறு :

1. முத்திரையிடப்பட்டுள்ள உறையின் உள்ளே ஒரு கரன்சி நோட்டின் வரிசை எண்ணைப் படித்துக் காட்டுக.

2. ஒரு கரன்சி நோட்டினைப் போன்று மற்றொரு கரன்சி நோட்டினை உண்டாக்கிக் காட்டுக.

3. கடவுள் துணையால் பாதத்தில் எவ்விதப் புண்ணோ, கொப்பளமோ ஏற்படாமல் அரை நிமிட நேரம் எரியும் தணலில் அசையாமல் நின்று காட்டுக.

4. நான் கேட்கும் ஒரு பொருளை ஒன்றுமில்லாமல் (சூனியத்தில்-வெற்றிடத்தில்) இருந்து உண்டாக்கிக் காட்டுக.

5. மனோபலத்தைப் பயன்படுத்தி ஒரு திடப் பொருளை அசைத்தோ, வளைத்தோ காட்டுக.

6. தொலைவில் உணர்தல் ஆற்றலைப் பயன்படுத்தி மற்றொருவன் நினைப்பதை வெளியில் எடுத்துக்கூறுக.

7. பிரார்த்தனை, அத்மபலம், புனித தீர்த்தம், விபூதி, ஆசீர் வாதம் இவை போன்றவற்றின் மூலம் துண்டிக்கப்பட்ட ஒர் உடல் உறுப்பை ஓர் அங்குல நீளம் வளரச் செய்து காட்டுக.

8. யோக சக்தியால் ஆகாயத்தில் எழுப்பிக் காட்டுதல் அல்லது மிதப்பது போல் செய்து காட்டுக.

9. யோக சக்தியால் அய்ந்தே மணிதுளி அய்ந்து நிமிடம் இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டுக.

10. நீரில் நடந்து காட்டுக.

11. உன் உடலை ஓர் இடத்தில் இருக்க வைத்துவிட்டு வேறு ஓர் இடத்தில் இவ்வுடலை உருவாக்கிக் காட்டுக.

12. யோக சக்தியால் அரை மணி நேரம் சுவாசிப்பதை நிறுத்திக் காட்டுக.

13. ஆழ்நிலை தியானத்தாலோ, வேறு எவ்வகை தியானத்தாலே படைப்பாற்றல் மிக்க நுண்ணறிவையோ, பேரறிவையோ பெருக்கிக் காட்டுக.

14. நிழற்படம் பிடிப்பதற்காக ஓர் ஆவி அல்லது ஒர் பேயினை நேரில் தோன்றச் செய்க.

15. நிழற்படம் பிடிக்கும்போது படத்தாளில் பதிவாகாதவாறு உன்னை மறைத்துக் காட்டுக.

16. மறுபிறவியின் விளைவாலோ, நல்ல அல்லது கெட்ட ஆவிபிடித்து இருப்பதாலோ உனக்குத் தெரியாத மொழியினைப் பேசிக்காட்டுக.

17.பூட்டப்பட்ட அறையிலிருந்து தெய்வீக ஆற்றலால் வெளியே வந்த காட்டுக.

18. மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளை கண்டுபித்துக் காட்டுக.

19. வெறும் நீரை பெட்ரோலாகவோ, ஒயினாகவோ மாற்றிக் காட்டுக.

20. ஒயினை ரத்தமாக மாற்றிக் காட்டுக.

21. ஜோதிடமும், கைரேகை சா°திரமும் விஞ்ஞான ரீதியிலானவை என்று உரிமை பாராட்டி ஏராளமான ஏமாந்த சோணகிரிகளை ஏமாற்றி வரும் ஜோதிடர்களும், கைரேகை வல்லுநர்களும் பின்வரும் சவாலை ஏற்பார்களா? மிகச் சரியாக அட்சதீர்க்காம்சங்களுக்கு இணங்க துல்லியமான பிறந்த நேரம், பிறந்த இடம் இவற்றோடு கணிக்கப்பட்டு தரப்படும் 10 ஜாதகங்கள் அல்லத கைரேகை பதிவுகளிலிருந்து இவை ஆண்களுடையன, இவை பெண்களுடையன, இவை இறந்தவர்களுடையன, இவை உயிரோடு இருப்பவர்களுடையன என்று அய்ந்த விழுக்காடு பிழைக்குட்பட்டு தேர்ந்ததெடுத்துக்காட்டுக.

என் சவால்களை ஏற்க அற்புதம் செய்பவர்கள் எனப்படுவோர் எவரேனும் முன் வருக. ஏற்ற என்னை வென்று ரூ.நூறாயிரம் பரிசு பெறுக.-டாக்டர் கோவூர்.

தான் செய்து காட்டும் அற்புதத்தைப் புலனாய்வுக்கு உட்படுத்த அனுமதிக்காதவன் ஓர் அயோக்கியன்! ஓர் அற்புதத்தைப் புலனாய்வு செய்யும் மனத் துணிவற்றவன் ஏமாளி!! சரி பார்ர்தல் இன்றியே ஓர் அற்புதத்தை அப்படியே நம்பத் தயாராய் இருப்பவன் முழு மூடன்!!-டாக்டர். கோவூர்.