குழிபறிக்கும் கூட்டம் - ஓர் எச்சரிக்கை
குழிபறிக்கும் கூட்டம் - ஓர் எச்சரிக்கை
மூன்று பார்ப்பனப் பிரமுகர்கள் தனியிடத்தில் சந்தித்து தி.மு.க., ஆட்சியை எப்படிக் கவிழ்க்கலாம் என்று சதியாலோசனை நடத்தினர் என்கிற ``பெட்டிச் செய்தி’’ நேற்றைய ``விடுதலை’’யில் வெளிவந்தது. இது உண்மையா என்ற தலைப்பில் பதித்திருந்தேன்.இவ்வார `துக்ளக்’ இதழைப் படித்தவர்களுக்கு `சோ’ என்ற வடிவத்தின் மூலம் பார்ப்பனர்களின் உள்ளக்கிடக்கை எத்தகையது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
40 பக்கங்களில் பெரும்பாலும் தி.மு.க., மீதும், அதன் தலைவர் கலைஞர் அவர்கள் மீதும் சேற்றை வாரி இறைக்கும் `கும்பாபிஷேகம்’ அதிகமாகவே நடந்திருக்கிறது.அவாளின் புழுக்கம் எத்தனை டிகிரியில் இருக்கிறது என்பதற்கு இந்த இதழ் ஒரு `தர்மா மீட்டர்’ ஆகும். அட்டைப் படத்தில் தொகையறா தொடங்கி, 38 ஆம் பக்கத்தில் மங்களம் பாடும்வரை அவாள் பாஷையில் கூறவேண்டுமென்றால் ஒரே ``துவேஷக் கணைகள்’’ தாம்! `துக்ளக்’கின் பாணி எப்படியென்றால், பா.ஜ.க., மீது குறை கூறினாலும், அதனை நிவர்த்திக்க என்ன செய்யவேண்டும் என்கிற விஷயதானம் நிரம்பவே இருக்கும். செல்வி ஜெயலலிதா விடயத்திலும் இந்தப் பாணிதான்!குறைகளைச் சுட்டிக்காட்டுவதுபோலத் தோன்றும். அந்தக் குறைகளை அக்கட்சிகள் களைந்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்கிற உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடுதான் அவை. அந்த நல்ல நிலை என்பதற்கு அர்த்தம் அவாள் நலனைப் பாதுகாப்பது என்பதாகும்.
ஆனால், தி.மு.க.,மீது சுமத்துவது குறைகள் அல்ல - பெரும்பாலும் அபாண்டங்கள்தான். மக்கள் மத்தியில் விஷத்தைத் தூவும் நோக்கம் அதில் குத்திட்டு நிற்கும். பா.ஜ.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் கூறுவதுபோல வழிமுறைகள் அதில் சிறிதும் இருக்காது - வெறும் குற்றப் பத்திரிகையாகவே இருக்கும்.தலையங்கப் பகுதி - தி.மு.க.,வின் வெற்றியை `துக்ளக்கால்’ ஜீரணிக்க முடியவில்லை என்பதை பறைசாற்றுகிறது.அத்தோடு நிறுத்தி விட்டால் போதுமா? தி.மு.க.,வைத் தோற்கடிக்கவேண்டுமே - அதுதானே அவாளின் ஆர்ப்பரிக்கும் உள்ளம் - அதற்கொரு வழியைச் சொல்லுகிறது.
``தமிழகத்தில் பலமான எதிர்க்கட்சியாக வேண்டுமானால், அ.தி.மு.க.,வையும், தே.மு., தி.க.,வும் தனித்து நின்று அதை சாதிக்க முடியாது. இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பல ஆண்டுகாலமாகவே பலமான கூட்டணி உள்ள கழகமே வெற்றி பெற்று வந்திருக்கிறது. இதை தி.மு.க., உணர்ந்த மாதிரி அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் உணர்ந்ததாகத் தெரியவில்லை’’ என்று மிகவும் துயரப்பட்டு எழுதியிருக்கிறது.
தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அவருக்கு இருக்கும் அக்கறை எத்தகையது என்பதற்கு இந்த `சந்து’ செய்விக்கும் வேலையே எடுத்துக்காட்டாகும் எம்.ஜி.ஆருக்காக வேவு வேலை பார்த்தவராயிற்றே - இப்பொழுது மட்டும் சும்மா இருப்பாரா?கேள்வி - பதில் பகுதியை எடுத்துக்கொண்டால் மொத்தம் 28 கேள்விகளில் 22 கேள்வி - பதில்கள் இதே பாணியில்தான்! கேள்வி கேட்பவர்கள் அத்தனைப் பேரும் கலைஞரையும், தி.மு.க.,வையும் நோக்கி மட்டும்தான் மடல் விடுக்கிறார்களா? இல்லை தயாராகத் துடித்துக் கொண்டு இருக்கும் பதில்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள வினாக்களா என்கிற நியாயமான அய்யம் ஏற்படத்தான் செய்யும். அந்த அளவுக்கு அரட்டைக் கச்சேரி நடத்தித் தள்ளியிருக்கிறார். 28 கேள்விகளில் 22 கேள்விகள் தி.மு.க.,மீதும், கலைஞர் மீதும் வீசப்பட்ட அவதூறுச் சகதி என்றால், மீதிக் கேள்வி - பதில்கள் அத்தனையும் இட ஒதுக்கீட்டின் மீது திராவக வீச்சுதான்!``எச்சரிக்கை’’ பகுதியில் தாழ்த்தப்பட்டோர்களுக்குப் பதவி உயர் வில் இட ஒதுக்கீடு குறித்து குழி பறித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடித் தீர்த்து இருக்கிறார். இருக்காதா?
தாழ்த்தப்பட்டோருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்ட வடிவம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது ஒரே ஒரு எதிர்ப்பு வாக்கு - அது `சோ’ ராமசாமியுடையதுதான். தமிழின உணர்வுக்கும், சமூகநீதிக்கும் எதிர்த்திசையில் இருக்கும் இந்த மனிதர்களை சரியாக அடையாளம் காணாமல் `துக்ளக்’கைக் காசு கொடுத்து வாங்கும் தமிழர்கள், இனியாவது திருந்தவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு!
1 Comments:
நல்ல கட்டுரைகள் தமிழன் சார்..நாத்திகத்தை வளர்க்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..!
Post a Comment
<< Home