“கோபியர் கொஞ்சும் ரமணா! கோபால கிருஷ்ணா!
வைணவ பக்த கோடிகள் இராமாவதாரத்தைப் “பூர்ண” அவதாரம் என்றும், கிருஷ்ணாவதாரத்தைப் “பரிபூர்ண” அவதாரமென்றும் சிறப்பித்து பேசுவர். அந்த ‘அவதாரம்’ செய்த லீலைகளை விரித்துரைப்பதுதான் பாகவதம். பகவான் கோவிந்தனின் ‘பரதாராபிமர்சனம்’ என்ற மிதமிஞ்சிய ஆபாசத்தைப் படம் பிடித்துக் காட்டுவதான் ‘ராசலீலை’ என்னும் பகுதி. (அபிமர்சனம் = தொடுதல், தொடர்பு) கிருஷ்ணனின் லீலைகளை அறியுமுன் இந்த உலகத்தில் அவர் ஏன் “மானிட ஜன்மத்தை” எடுத்தார் என்பதை அறிந்து கொள்வது அவர் செய்த லீலைகளுக்கு “வலு” சேர்க்கும் அல்லவா?
இதோ அவரே தம் கிருஷ்ணாவதார நோக்கத்தைத் தெளிவாகக் கூறுவதைக் கேளுங்கள்.“இந்தத் தர்ம ஸம்ஹிதையைப் (தொகுத்துச் சொல்லுவது) பற்றி என்ன சந்தேகம்? தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும், துஷ்டர்களை நாசம் செய்வதற்காகவும் நான் (கிருஷ்ணன்) எனக்கு இந்த மானிட ஜன்மத்தை என்னிடத்தில் மாயையினால் செய்து கொண்டேன்” - வைஷ்ணவதர்மம் - மகாபாரதம் - ஆஸ்வ மேதிக பர்வம். அத்யாயம் 96, பக்கம் 267. பகவான் கோபாலனுடைய லீலைகளை விரிவாய் “உபதேசிக்கும்” பகுதி பாகவதத்தில் பத்தாவது “°கந்தம்” (பகுதி). பாகவதத்தை யாக்கனத்தோடு அச்சிட்டு வெளியிட்ட கடலங்குடி நடேசசாஸ்திரிகள் கூட “கிளு கிளு”ப்பான இப்ப குதியைத்தான் முதலில் வெளியிட்டார்.
இதில் கிருஷ்ணன் பர°திரீகளான (பிறர் மனைவியர்) கோபிகைகளோடு அத்யாயம் 29இல் “ஜலக்கிரீடை” செய்ததையும், அத்யாயம் 30இல் “வனக்கிரீடை” செய்ததையும், அத்யாயம் 31இல் “ஸ்தலக் கிரீடை” செய்ததையும் மிக மிக அருவருப்பான மொழியில் சொல்லப்பட்டுள்ளது. (ஜலக்கிரீடை - நீரில் விளையாடுவது, வனக்கிரீடை - காட்டில் விளையாடுவது, ஸ்தலக் கிரீடை - நிலத்தில் விளையாடுவது) அத்தியாயங்கள் 32, 3359 ஆகியவற்றிலும் “சிருங்கார கதை” தொடர்கிறது. அந்த “லீலைகளில்” ஒன்றிரண்டை கூறக்கூடாதா? அவைகளைக் கேட்காவிட்டால் “பைவ் ஸ்டார் ஓட்டலில் பழையது சாப்பிட்டது போல்” ஆகிவிடும் என்று பக்தர்கள் புலம்புவது என் காதுக்கு எட்டாமலில்லை. இதோ ஒன்றிரண்டை நாகரிகமான மொழியில் சொல்லுகிறேன். கேளுங்கள்!
“கோபஸ்திரீகள் (கோபிகாஸ்திரீகள்) காமத்தை அதிகப்படுத்தும் கிருஷ்ணனின் கீதத்தைக் கேட்டு அவனிருக்கும் இடம் நாடி ஓடிவருகின்றனர். - பால் கறந்து கொண்டிருந்த சிலர் ஆசை கொண்டர்களாய் பால் கறப்பதை நிறுத்தி விட்டு ஓடிவந்தனர். - அன்னம் பரிமாரிக் கொண்டிருந்தவர் அதை விடுத்தும், - குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தவர் அதை விடுத்தும், - கணவர்களுக்குப் பணிவிடை செய்பவர் அதை விடுத்தும், - உடம்புக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தவர் அதை விடுத்தும், கணவர்கள் தடுத்தும், பிதா தடுத்தும், மாதா தடுத்தும் உடன்பிறந்தான் தடுத்தும் கட்டுக்கடங்காது, மோகத்தோடு கிருஷ்ணனை நோக்கி ஓடுகின்றனர்.
ஓடிவந்த ஒய்யாரிகளோடு கோபாலன் கண்டபடி, கண்ட இடங்களில் ஆடினான், பாடினான், இறுதியில் கூடினான்.யமுனை நதியிலும், அதையொட்டிய சோலைகளிலும், நதிக்கரை திட்டுகளிலும், மனம் “திகட்டும்” அளவுக்குக் கோபியரோடு கொஞ்சினான் கோகுல கிருஷ்ணன்.
இந்தப் பகுதியைப் பரம பாகவதர்கள் “ராசலீலை” என்று பக்தி பரவசத்தோடு பாராட்டுவர். ஆனால் கோவிந்தனும், கோபியரும் செய்த சேட்டைகளைப் படித்தால் நமக்கோ, உள்ளும் புறமும் குமட்டும். நமக்கு மட்டுமா? இந்தப் பக்தி ‘ரசம்’ சொட்டும் பாகவதத்தை மரணத்தின் பிடியில் இருந்த பரீட்சித்து (அபிமன்யு மகன்) அரசன் சுகர் (வியாசரின் மகன்) என்னும் முனிவர் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தான். அவ்வரசனுக்கும் நம்மைப் போல் ஓர் அய்யம் ஏற்பட்டது. சுகமுனிவரை நோக்கி “தர்மம் காத்து அதர்மத்தை அழிக்க வந்த கோபாலன் என்னஎண்ணங்கொண்டு வெறுக்கத்தக்க காரியத்தைச் செய்தார். எல்லோருக்கும் வழிகாட்ட வேண்டிய பகவான் கோவிந்தர் “பரதாராபிமர்சனம்” (பர+தார+அபிமர்சனம் = பிறர் மனைவியைக் கூடுதல்) செய்வது தவறான காரியமல்லவா?” என்று “பச்சையாகக்” கேட்டான் பாராளும் பரீட்சித்.
“மகரிஷி”. க்கா தெரியாது மழுப்பி, குழப்பி, பதில் சொல்ல? கேட்ட வினாவிற்குத் தொடர்பு சிறிதும் இல்லாத அவருடைய “தத்துவ விளக்க”ப் பதில் இதோ! “மன்னா, எல்லாவற்றையும் அக்னி எரித்துவிடும். அக்னியைப் போன்ற ஒளி உடையவர்களும் அப்படியே. அவர்களை எந்த பாபமும் பற்றுவதில்லை. அவர் செய்தாரே என்பதைக் காட்டி தான் செய்ய எவரும் மனதாலும் நினைக்கக்கூடாது. அப்படிச் செய்பவன் அழிந்து போவான். சிவபெருமான் விஷத்தைச் சாப்பிட்டாரே என்று தானும் சாப்பிடுபவன் அழிந்து போவான்.” மேலும் தொடர்கிறார் சுகர், “ஈஸ்வரர்களின் உபதேசமே பின்பற்றக் கூடியதாகும், அவர்களுடைய நடத்தையைப் பிரமாணமாக (விதி (அ) ஆணை) எடுத்துக் கொள்ளக் கூடாது.”கேட்ட கேள்வி, “கோவிந்தன் செய்தது சரியா?” என்பது. சுகர் சொன்ன பதில், “அவர்களின் செயல்கள் “விதி” அல்ல. வாக்கே ஆணை.”“ஊருக்குத்தான் உபதேசம். அது எனக்கு இல்லை” என்று ஒரே வரியில் முனிவர் சொல்லியிருக்கலாமே!வியாசர் தம் “ஞான மகிமையால்” நாரதர் வேண்டுகோள்படி பகவானுடைய அளவற்ற “லீலைகளை” வெளிக்கொணர்ந்து உலகுக்கு அளித்த “பாகவதம்” என்பது இதுதான். ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்! “கோபியர் கொஞ்சும் ரமணா! கோபால கிருஷ்ணா! என்று பாடத்தோன்றுகிறதா?
- நன்றி: கடலங்குடியின் ஸ்ரீமத் பாகவதம்- கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், உரைநடையில்ஸ்ரீமத் பாகவதம் - ஸ்ரீ ஆனந்த நாச்சி யாரம்மா - ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Article from Ausran Malar